மோடி: பயங்கரவாதிகளை முறியடிக்க முடியும்

மோடி: பயங்கரவாதிகளை முறியடிக்க முடியும்

1 mins read
5aa31ac9-a718-453c-a95a-0aa3e5a24d51
-

இந்தியாவை அச்சுறுத்தும் பயங்கரவாதிகளை முறியடிக்கத் தம்மால் முடியும் என்று அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். 200க்கும் அதிகமானோர் உயிரிழந்த இலங்கை குண்டுவெடிப்புகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்த திரு மோடி, இது போன்ற தாக்குதல்கள் இந்தியாவில் நடந்திராமல் இருப்பதை உறுதி செய்ய தம்மால் முடியும் என்று அவர் கூறினார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரதிய ஜனதா அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளைத் திரு மோடி ராஜஸ்தானில் நேற்று மேற்கொண்ட பிரசாரத்தின்போது தெரிவித்தார். இதனை மக்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதன் மூலம் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி முடியும் பொதுத்தேர்தல் முடிவுகள் தமக்குச் சாதகமாக அமையும் என்று திரு மோடி நம்புவதாகச் செய்தித் தகவல்கள் கூறுகின்றன. இலங்கை தாக்குதல்களில் குறைந்தது மூன்று இந்தியர்கள் உயிரிழந்ததாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்று 'பிடிஐ' செய்தி நிறுவனம் தெரிவித்தது.

"எங்கள் அண்டை நாடான இலங்கையில் பயங்கரவாதிகளின் விளையாட்டு ரத்தக் களறியில் முடிந்தது. அப்பாவி மக்களை அவர்கள் கொன்றுள்ளனர்," என்று திரு மோடி கண்டித்தார். இத்தகைய பயங்கரவாதிகளால் இந்தியாவும் தொடர்ந்து துன்பப்படுவதாக திரு மோடி ராஜஸ்தானில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது தெரிவித்தார்.