மற்ற தேர்தல்களைவிட இவ்வாண்டின் இந்தியப் பொதுத்தேர்தல் மாறுபட்டது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்திருக்கிறார். அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற நினைப்பவர்களுக்கும் அதே சட்டத்தைச் சிதைக்க செயல்படுபவர்களுக்கும் இடையிலான போட்டி இது என்று அவர் கூறினார்.
இவ்வளவு பொறுப்பற்ற பிரதமரை இந்தியா இதுவரை கண்டதே இல்லை என்று திரு நரேந்திர மோடியைத் திருமதி காந்தி சாடினார்.
உத்தரப் பிரதேசத்தில் திரு நரேந்திர மோடி கடந்தாண்டு நவம்பர் மாதம் பிரசார உரை ஆற்றியபோது, "ஊழலுக்கு எதிராகப் போர்க்கொடியை ஏந்தியுள்ள நான் தவறு செய்ததுபோல் எதிர்க்கட்சியினர் என்னையே சுற்றிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்களால் என்னை என்ன செய்ய முடியும்? நான் துறவி போன்றவன். எனக்குச் சொந்தமான கொஞ்ச நஞ்சப் பொருட்களுடன் வெளியேறுவேன்," எனக் கூறியிருந்தார். இதனை விமர்சித்த திருமதி காந்தி, திரு மோடியின் அந்த வாக்கியம் அவரது பொறுப்பின்மையை எடுத்துக்காட்டுவதாகத் தெரிவித்தார்.
இந்தியா நிறுவப்பட்டபோது கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளைத் தற்காக்க காங்கிரஸ் கடைசி மூச்சு வரை போராடும் என்றும் திருமதி காந்தி சூளுரைத்தார்.

