ரஃபேல் ராணுவ விமான விவகாரம் தொடர்பில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சார்பிலான மனுத்தாக்கல் இந்திய உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் திருடன் என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் கூறியதாகத் திரு ராகுல் தமது பிரசார உரையின்போது கூறியதன் தொடர்பில் நீதிமன்றம் கடிதம் வழியாக அவரிடம் விளக்கம் கேட்டிருந்தது. அதற்குப் பதிலளித்த திரு ராகுல், பிரசாரத்தின்போது ஆவேசத்தில் தவறுதலாக அப்படிப் பேசியதாகத் தெரிவித்தார்.
இந்த விளக்கத்தால் திருப்தி அடையாத பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த மீனாட்சி லேகி, சில வாரங்களுக்கு முன்னர் திரு ராகுலுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30ஆம் தேதி) விசாரணை செய்ய நீதிமன்றம் முடிவெடுத்திருந்தது. திரு ராகுல் இப்போதைக்கு நீதிமன்றம் செல்லத் தேவையில்லை என்றும் அது கூறியது.
திரு ராகுலின் சார்பாகப் புதிதாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அவர் நீதிமன்றத்தை மிகவும் மதிப்பவர் என்றும் தமது கட்சித் தொண்டர்களும் ஊடகங்களும் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் நீதிமன்றம் மோடியைப் பற்றி அப்படிச் சொன்னதாகத் திரு ராகுல் கருதினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

