ஜார்கண்ட்: செய்தியாளர்களுக்கு தாளுறையில் பணத்தை வைத்து பாஜக லஞ்சம் கொடுக்க முயன்றதாக காஷ்மீரின் லே பத்திரிகையாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக லே செய்தியாளர் சங்க உறுப்பினர்கள் கையெழுத்திட்ட இரண்டு பக்க புகார் கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் மாநில பாஜக தலைவர் ரெய்னா மற்றும் எம்எல்சி விக்ரம் ரந்தாவா ஆகிய இருவரும் செய்தியாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் அவர்கள் மீது எப்ஐஆர் பதிவுசெய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்திய லே செய்தியாளர் சங்கத் தலைவர் மொருப் ஸ்டான்சின், "தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கொடுத்துள்ளோம்," என்றார். இக் கடிதத்தைப் பகிர்ந்துள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார். இந்நிலையில் இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என ரெய்னா கூறியுள்ளார்.

