புதுடெல்லி: இந்தியாவில் ஒரு மாகாணத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு முதன்முதலாக அறி வித்துள்ளது.காஷ்மீர் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த கைகலப்பில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஐஎஸ் அமைப்பு இவ்வாறு அறி வித்து இருக்கிறது. இந்தப் பயங்கரவாத அமைப் பின் அமாக் செய்தி நிறுவனம், வெள்ளிக்கிழமை அந்தப் புதிய மாகாணம் பற்றிய அறிவிப்பை விடுத்தது. அதற்கு 'விலயஹ் ஆஃப் ஹிண்ட்' (Wilayah of Hind) என்று பெயர் சூட்டப்பட்டு இருப்ப தாகவும் அறிக்கை ஒன்றில் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஜம்மு காஷ்மீரில் சோஃபியான் என்ற பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இஷ்ஃபக் அகம் மது சோஃபி என்பவர் கொல்லப்பட்டதாகவும் ஐஎஸ் அறிக்கை தெரிவித்தது. சோஃபியான் பகுதியில் நடந்த அந்த மோதலில் இந்திய ராணுவத் தினருக்கு உயிருடற் சேதத்தை தான் ஏற்படுத்தியதாகவும் ஐஎஸ் கூறியது. மத்திய கிழக்கில் ஈராக் மற்றும் சிரியா பகுதிகளில் தீவிரமாகச் செயல்பட்டுவந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஏப்ரலில் நசுக்கப்பட்டது. அதற்குப் பிறகு சுயவிளம்பர நோக்கத்தில் இந்தியாவில் தான் ஒரு மாகாணத்தைத் தோற்றுவித்து இருப்பதாக அந்த அமைப்பு இப் போது அறிவிக்கிறது என்று கூறப் படுகிறது.
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் காஷ்மீரில் இந்திய ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகாலமாக பிரிவினைவாதிகள் ஆயுதபாணி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அத்தகைய போராட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள் காஷ் மீருக்குச் சுதந்திரம் வேண்டும் என்று கேட்கிறார்கள். அல்லது பாகிஸ்தானுடன் காஷ்மீர் சேர வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை போன்று அனைத்துலக நோக்கம் எதுவும் காஷ்மீர் தீவிர வாதிகளுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஎஸ்ஐஎஸ் மாகாண அறிவிப்பு பற்றி கருத்து கேட்டபோது இந்திய உள்துறை அமைச்சின் பேச்சாளர் கருத்து தெரிவிக்கவில்லை. இதனிடையே, சோஃபியானில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இந்திய அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்தனர்.