கமலின் சர்ச்சைப் பேச்சு; தமிழிசை, எச்.ராஜா கண்டனம்

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஓர் இந்து என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்ததை அடுத்து அவருக்கு எதிரான கண்டனங்கள் தொடர்ந்து குவிந்தவண்ணம் உள்ளன. 1948ஆம் ஆண்டில் மோகன்தாஸ் கே. காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயை கமல்ஹாசன், தமிழகத்தின் அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்துகொண்டிருந்தபோது அவ்வாறு வருணித்திருக்கிறார். அங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அவ்வாறு தாம் கூறவில்லை என்றும் காந்தியின் சிலை ஒன்றின் முன்னிலையில் தமது கருத்துகளைச் சொல்வதாகவும் கமலஹாசன் கூறினார். மூவர்ணங்கள் அப்படியே இருக்கவேண்டும் என்று நல்ல இந்தியர்கள் ஆசைப்படுவதாகவும் அவர் சொன்னார்.

இது குறித்து தமிழகத்தின் பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். சிறுபான்மை மக்கள் நடுவில் நின்று அவர் பேசியது ஆபத்தானது என்றும் மத உணர்வுகளைத் தூண்டக்கூடியது என்றும் டாக்டர் தமிழிசை குறைகூறியுள்ளார். 

தனது சொந்த வாழ்க்கையில் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்கத் தவறிய கமல் எப்போதும் ஒழுக்கத்தையே கடைப்பிடிக்கும் காந்திக்குக் கொள்ளுப்பேரன் எனத் தம்மைக் கூறிக்கொள்ள தகுதியற்றவர் எனத் தமிழிசை சாடியுள்ளார். கமல் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், “கமல்ஹாசனைவிட அரசியல் விஷம் வேறு யாரும் இருக்க முடியாது. தமிழக அரசியலில் மக்கள் இவரை நுழையவிட மாட்டார்கள்,” என பாஜகவின் தேசியச் செயலாளர் எச் ராஜா, டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த விவகாரத்தில் கருத்துரைத்த நடிகர் விவேக் ஓபராய், கலையைப் போல் தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது என டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். இந்த நாட்டைப் பிளவுபடுத்தவேண்டாம் என்றும் ஓபராய் தமது பதிவில் கேட்டுகொண்டார்.

இதற்கிடையே கமல்ஹாசன் தனது இன்றைய பிரசாரத்தை ரத்து செய்வதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

Loading...
Load next