அன்புமணி: ‘முதல்வராவதே ஸ்டாலினின் ஆசை’

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வர் பதவிக்காக மட்டும் ஆசைப்படுவதாகவும், மக்கள் நன்றாக இருக்கவேண்டும் என்ற உண்மையான ஆசை தங்கள் கூட்டணியினருக்கே இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் நோக்கம் தனிநபர் விமர்சனம் அல்ல, நாட்டின் வளர்ச்சியே என்று அவர் கூறினார்.

பாஜகவுக்கு ஸ்டாலின் சவால் விடுத்துள்ளதை அடுத்து அன்புமணியின் கருத்துகள் வெளிவந்தன. ஸ்டாலின் தனது சுய அரசியல் ஆதாயத்திற்காக பாஜகவுடன் ரகசியமாகப் பேச்சு நடத்துவதாக ஜெயகுமார் முன்னர் கூறியிருந்ததை உறுதிப்படுத்துவதாக பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கூறினார். இதனை வன்மையாக மறுத்துள்ள ஸ்டாலின், அவ்வாறு நடந்ததாக இவர்களால் நிரூபிக்க முடியுமானால் அரசியலிலிருந்து நிரந்தரமாக விலகிக்கொள்வதாகச் சூளுரைத்திருக்கிறார். ஆனால் தமிழிசை கூறியது தவறு என்றால் அவரும் மோடியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அரசியலிலிருந்து பதவி விலகத் தயாராக இருக்கிறார்களா என்று ஸ்டாலின் அறைகூவல் விடுத்தார்.

“பச்சைப் பொய் நிறைந்த ஒரு பேட்டியை பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்திருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை சவுந்தரராஜன் இப்படியொரு பொய் பேட்டியை அளிப்பதற்காகத் தன்னை இந்த அளவிற்குத் தரம் தாழ்த்திக் கொண்டுவிட்டாரே என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்,” என்று ஸ்டாலின் நேற்று வெளியிட்ட தமது அறிக்கையில் கூறியுள்ளார்.