கமலை நோக்கிப் பாய்ந்த காலணி; இளையர் கைது

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து எனக் கூறி இந்துக்கள் பலரின் மனதைப் புண்படுத்தியுள்ள நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனை நோக்கி இளையர் ஒருவர் காலணி வீசினார். தமிழகத்தின் திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு  இருந்தபோது இந்தச் சம்பவம் நேர்ந்தது. சம்பந்தப்பட்ட இளையர் கைது செய்யப்பட்டு தற்போது விசாரிக்கப்படுகிறார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 12) அரவக்குறிச்சியில் முஸ்லிம்கள் பெரும்பான்மை உள்ள கூட்டத்தின் முன்னிலையில் உரையாற்றியபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி, அந்நாட்டின் பெருந்தலைவர்களில் ஒருவரான மோகன்தாஸ் காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற இந்து எனப் பேசி கமல்ஹாசன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, நடிகர் விவேக் ஓபராய், வைணவ சமயத் தலைவரான மன்னார்குடி ஜீயர், மாநில அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் கமல்ஹாசனின் கருத்துகளை மிகக் கடுமையாகக் கண்டித்தனர். அவரது பேச்சு தேவையில்லாமல் மக்களுக்கிடையே பிளவை ஏற்படுத்துவதாகப் பலர் கருதியபோதும் தாம் கூறியது வரலாற்று உண்மையே என கமல்ஹாசன் நேற்று திருப்பரங்குன்றத்தில் ஆற்றிய பிரசார உரையில் கூறினார்.

“நான் அவரக்குறிச்சியில் பேசியதற்குக் கோபப்படுகிறார்கள். எனக்குப் பல இடங்களில் பெருமை கிடைக்கிறது. சில இடங்களில் அவமானப்படுத்துகிறார்கள். நான் பேசுவது நிஜம். நான் நினைத்திருந்தால் பயங்கரவாதி என்றோ, கொலைகாரன் என்றோ சொல்லியிருக்கலாம்,” என அவர் அப்போது கூறினார். “நீங்கள் கூடத்தான் என் தீவிர ரசிகர்கள்.,” என அவர் கூறியபோது கூட்டத்தில் ஆரவாரமும் கரவொலியும் எழுந்தன.

தான் பயன்படுத்திய தீவிரவாதி என்ற வார்த்தை, பயங்கரவாதி என்ற சொல்லுக்கு மாறுபட்டது என கமல்ஹாசன் இப்போது கூறுவது பின்வாங்கல் போல் இருப்பதாகச் சிலர் குறைகூறுகின்றனர். ஆயினும், தான் கூறியதை ஊடகங்கள் திரித்துக்காட்டுவதாக கமல்ஹாசன் சொல்கிறார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மத்தியில் ஆளுகிறவர்கள் இந்தியைத் திணிக்க பார்க்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்காவிட்டால் தமிழ்மொழியை மட்டுமல்ல தமிழகத்தையே விழுங்கிவிடுவார்கள். இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்காகவே புதிய கல்விக்கொள்கையைக் கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார் புதுவை முதல்வர் நாராயணசாமி.

25 Aug 2019

புதுவை முதல்வர்: விழித்திராவிடில் தமிழ்மொழியை விழுங்கிவிடுவர்