இன்றோடு ஓய்கிறது இடைத்தேர்தல் பிரசாரம்

இன்றோடு ஓய்கிறது இடைத்தேர்தல் பிரசாரம்

1 mins read

சென்னை: சூலூர், அரவாக் குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடக்கிறது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்று இறுதி வேட்பாளர் பட்டியல் மே 2-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 4 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். நான்கு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சியின் தலைவர்கள் தொகுதிகளில் முற்றுகையிட்டு தீவிரப் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று அவர் சூலூர் தொகுதியில் திண்ணையில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

அ.ம.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர் கமல்­ஹாசன், ஆகியோரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது.