கமல்ஹாசனின் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முட்டை, கல் ஆகியவற்றை வீசிய நபருக்கு எதிராக போலிஸ் நிலையத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடிகராகவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவராகவும் உள்ள கமல்ஹாசன் வியாழக்கிழமை அரவக்குறிச்சிக்கு மீண்டும் சென்று பிரசார உரை ஆற்றினார். உரையாற்றிய பின்னர், பிரசார மேடையிலிருந்து அவர் கீழே இறங்க முயன்றபோது மேடையை நோக்கி இரண்டு செருப்புகள் வீசப்பட்டன. முட்டை ஒன்றும் வீசப்பட்டது. இவை எதுவும் கமல்ஹாசன் மீது படாமல் மேடையில் விழுந்தன.
இவற்றை வீசிய நபரை மக்கள் நீதிமய்யக் கட்சியினர் தடுத்து நிறுத்தி பின்னர் அந்நபரை போலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நபர் பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என இந்திய ஊடகங்கள் சில கூறுகின்றன. இதன் தொடர்பில் அமைதியைக் காக்க, கமல்ஹாசன் தனது தொண்டர்களிடம் வன்முறையில் ஈடுபடாமல் இருக்கும்படி கேட்டிருந்தார்.
இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என்றும் அவர் மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே என்றும் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியதை அடுத்து சர்ச்சை அனல் தொடர்ந்து பெருகியவண்ணம் உள்ளது. கமல்ஹாசனுக்கு எதிராக பாஜக, இந்து அமைப்புகள் உள்ளிட்ட ஏராளமானோர் போலிசிலும் நீதிமன்றத்திலும் புகார்க்கணைகளை அள்ளி வீசி வருகின்றனர். ஆங்காங்கே அவரது உருவ பொம்மையும் உருவப்படங்களும் எரிக்கப்பட்டும் வருகின்றன.

