தேர்தல் ஆணையத்தைப் பாராட்டும் பிரனாப் முகர்ஜி

இந்தியத் தேர்தல் ஆணையம் பொதுத்தேர்தலை மிகச் சிறப்பான முறையில் கையாண்டதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் பிரனாப் முகர்ஜி தெரிவித்திருக்கிறார். ஆணையம் பாரதிய ஜனதாக் கட்சிக்குச் சாதகமாகச் செயல்படுவதாகக் கூறிவரும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டிற்கு நேர்மாறாகத் திரு முகர்ஜி இவ்வாறு கூறியிருக்கிறார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியதை அடுத்து திரு முகர்ஜியின் கருத்துகள் வெளிவந்தன.

இந்தியாவின் தேசிய அமைப்புகள் சிறப்பாக இயங்குவதாகக் கூறிய திரு முகர்ஜி, சிறப்பாகச் செயல்படாத ஊழியர்கள்தான் தாங்கள் பயன்படுத்தும் கருவிகளைக் குறைகூறுவர் என நம்புவதாகச் சொன்னார். தேர்தல் ஆணையத்தின் சிறந்த இயக்கமே இந்திய ஜனநாயகத்தின் வெற்றிக்குக் காரணம் எனப் புகழ்ந்தார் திரு முகர்ஜி.

காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்து, 2012 முதல் 2017 வரை இந்திய அதிபராகப் பதவி வகித்த திரு முகர்ஜி, தேர்தலில் மக்கள் மனமுவந்து கலந்துகொண்டது பாராட்டுக்குரியது என்றார்.