சோகத்தில் காங்கிரஸ்

திருடன், திருடன் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தூற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் வருங்காலம் கரடு முரடாகத் தெரிகிறது. கடந்தத் தேர்தலைப் போலவே பழம்பெரும் கட்சியான காங்கிரஸ்  இந்தத் தேர்தலிலும் தோற்றது. இந்திய நாடாளுமன்றத்திலுள்ள 542 இடங்களில் கிட்டத்தட்ட 350 இடங்களைப் பெற்றுள்ளது  பாரதிய ஜனதா. ஆனால் காங்கிரசுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 88 இடங்கள் மட்டும் கிடைத்துள்ளன. அமேதி தொகுதியில் ராகுல் காந்தி ஸ்மிருதி இரானியிடம் தோற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தோல்வி இவ்வளவு மோசமாக இருக்கும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை எனத் தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் கட்சித் தலைவர் பதவியிலிருந்து திரு ராகுல் விலகுவதுதான் நல்லது என்று காங்கிரசின் மூத்தத் தலைவர்கள் எண்ணி வருவதாகக் கூறப்படுகிறது. ரஃபேல் விமானக் கொள்முதலை சர்சையைப் பெரிதாக்க திரு ராகுல் எடுத்த முயற்சிகள் கடைசியில் அவருக்கு எதிராக முடிந்ததாகச் சிலர் நினைக்கின்றனர். திரு மோடியைத் திருடன் என்று அழைத்ததோடல்லாமல் உச்சநீதிமன்றமே அவரை அவ்வாறு அழைத்தது எனத் தவறாகக் கூறியதற்காக திரு ராகுல் உச்சநீதிமன்றத்திடம் மன்னிப்புக் கேட்கவும் நேரிட்டது.

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தொலைக்காட்சி ஒளிவழிகளில் வெளிவந்ததை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. இதற்கு நேர்மாறாக காங்கிரஸ் தலைமையகத்தில் கவலை குடிகொண்டது. முழுமையான முடிவுகளுக்காகக் காத்திருக்காமல் காங்கிரஸ் தலைவர்கள் பலர் நம்பிக்கை இழந்து அங்கிருந்து வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது.