ஒடிசா: ஐந்தாவது முறை முதல்வராகிறார் நவீன் பட்நாயக்

ஒடிசா: ஐந்தாவது முறை முதல்வராகிறார் நவீன் பட்நாயக்

2 mins read

நவீன் பட்நாயக் தனது 72வது வயதில் 5வது முறையாக ஒடிசா முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

'மாற்றத்தை எதிர்நோக்குகிறது ஒடிசா, இங்கு வளர்ச்சி இல்லை, மந்தமான ஆட்சி' என்றெல்லாம் பிரதமர் மோடி நவீன் பட்நாயக் தலைமை ஒடிசா அரசை தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக விமர்சித்து வாக்குச் சேகரிக்க முயன்றார், ஆனால் மக்கள் மாற்றி யோசிக்கவில்லை. மத்தியில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதில் மக்கள் எப்படி மாற்றி யோசிக்கவில்லையோ அதே போல் ஒடிசாவிலும் அம்மக்கள் பிஜேடிதான் வேண்டும் பிஜேபி வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளனர். இதில் ஆளும் பிஜு ஜனதாதளம் பிரதமர் மோடியின் ஆக்ரோஷமான பிரசாரத்தை எதிர்கொண்டது. ஆனால் மோடியின் அயராத பிரசாரம் கூட அங்கு எடுபடாமல் 27 இடங்களில் மட்டுமே பாஜக முன்னிலை வகிக்கிறது. இது கடந்த தேர்தலைக் காட்டிலும் 5 இடங்கள் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. பிஜு ஜனதாதளம் (பிஜேடி) 110 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரசுக்கும் 4 இடங்கள் கூடுதலாக உள்ளன. பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

நவீன் பட்நாயக் இம்முறை 2 தொகுதிகளில் நின்று வென்றார். அவரது சொந்தத் தொகுதி ஹிஞ்சிலி. இங்கு அவர் 2000 முதல் வெற்றி பெற்று வருகிறார். மேற்கு ஒடிசாவின் பிஜேபூரிலும் நிற்கிறார். இவரது உடல் நிலையையும் வயதையும் குறிப்பிட்டு பிரதமர் மோடி, ஒடிசா அரசு "10 அடி நடக்க 10 நிமிடங்கள் ஆகிறது," என்று கிண்டலாகப் பேசினார்.

1998 முதல் 2009 வரை பிஜு ஜனதா தளம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தது. பின்னர் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடம் உறவு வைத்துக்கொள்ளாமல் ஒடிசாவின் முன்னேற்றமே முக்கியம் என்ற கொள்கையை நவீன் பட்நாயக் கடைப்பிடித்து வருகிறார். பிஜு பட்நாயக்கின் மகனான நவீன் பட்நாயக் 1997ல் ஜனதா தளத்திலிருந்து விலகி பிஜு ஜனதாதளம் தொடங்கினார்.

வாஜ்பாயின் அரசில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார் நவீன் பட்நாயக். பின்னர் அப்பதவியைத் துறந்து விட்டு ஒடிசா முதல்வராகப் பதவியேற்றார்.