இந்திய-அமெரிக்க உறவில் கூடுதல் நெருக்கம் ஏற்படலாம்

இந்தியாவிலுள்ள அரசியல் நிர்வாகத்தின் தொடர்ச்சி, அமெரிக்காவுடனான உறவு மேலும் அணுக்கமடையவிருப்பதைக் கோடிகாட்டுவதாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் திரு ஹர்ஷ் ஷ்ரிங்லா தெரிவித்திருக்கிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் வெற்றியை அடுத்து அவர் அவ்வாறு கூறியுள்ளார். திரு மோடியின் வெற்றியால் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பாதுகாப்பு, தற்காப்பு, பயங்கரவாத முறியடிப்பு உள்ளிட்ட துறைகளில் பங்காளித்துவம் இன்னும் வலுவாகும் என்று திரு ஷ்ரிங்லா தெரிவித்தார்.

வெற்றியடைந்த திரு மோடிக்கு அதிபர் டோனல்ட் டிரம்ப் டுவிட்டரில் தமது வாழ்த்துகளை உற்சாகமாகத் தெரிவித்தார். “இந்தியத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றிக்கு வாழ்த்துகள்! திரு மோடியின் தலைமையில் அமெரிக்க-இந்திய பங்காளித்துவத்திற்கு அருமையான எதிர்காலம் காத்திருக்கிறது,” என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டார்.

ஆசிய வட்டாரத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா எடுத்துவரும் முயற்சிகளுக்குப் பங்காற்றும் நாடுகளில் இந்தியா முக்கியமான ஒன்று. ஆயினும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வேறுபாடுகள் இல்லாமல் இல்லை. இந்தியாவிலிருந்து வரும் இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் வர்த்தகத் தடைகள், ஈரானிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்வதை நிறுத்த அமெரிக்கா கொடுத்துவரும் நெருக்குதல், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா அவசரமாக வெளியேறும் சாத்தியத்தால் அங்கு பாகிஸ்தானின் ஆதிக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளிட்டவை குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் கருத்தளவில் வேறுபட்டுள்ளன.

ஆயினும், பயங்கரவாத முறியடிப்பு தொடர்பில் இரு நாடுகளும் ஒருமித்த போக்கைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் போதிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதாக அமெரிக்கா கருதுவது இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளது. அத்துடன், காஷ்மீரில் இவ்வாண்டு தொடக்கத்தில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ‘ஜெய்ஷ்-இ-முகம்மது’ அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை அனைத்துலக பயங்கரவாதி என ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் அறிவித்ததற்கு அமெரிக்காவின் ஆதரவு முக்கியமாக இருந்தது. அவரைப் பயங்கரவாதியாக அறிவிக்கக்கூடாது என்று பல காலமாகக் கூறிவந்த சீனா வேறு வழியின்றி இதற்கு இணங்கியது.

திரு டிரம்ப் இந்தியாவுக்குச் சென்றதில்லை. ஆயினும் தனிப்பட்ட முறையில் அவருக்கும் திரு மோடிக்கும் இடையே நட்புப் போக்கு தென்படுவதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.