ஆந்திராவில் நோட்டாவிடம் தோல்வியடைந்த பாஜக, காங்கிரஸ்!

ஆந்திராவில் நோட்டாவிடம் தோல்வியடைந்த பாஜக, காங்கிரஸ்!

2 mins read

ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் பாஜகவும், காங்கிரசும் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. அதுமட்டுமன்றி அந்த மாநிலத்தில் நோட்டாவை விட இரு கட்சிகளும் குறைவான வாக்குகள் பெற்றுள்ளன.

ஆந்திராவில் உள்ள 175 பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.

கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சியால், 3 மக்களவைத் தொகுதிகளிலும், 23 பேரவைத் தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

அந்த மாநிலத்தில் காங்கிரசும், பாஜகவும் தனித்துப் போட்டியிட்டன. சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெறும் 1.17 விழுக்காடு வாக்குகளையும், பாஜக 0.84 விழுக்காடு வாக்குகளையும் பெற்றுள்ளd.

நோட்டாவுக்கு 4,01,969 பேர் வாக்களித்துள்ளனர். இது பதிவான வாக்குகளின் எண்ணிக்கையில் 1.28 விழுக்காடாகும்.

மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் வெறும் 1.29 விழுக்காடு வாக்குகளையும், பாஜக 0.96 விழுக்காட்டு வாக்குகளையும் பெற்றுள்ளd. நோட்டாவுக்கு 1.49 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன.

கடந்த 2014ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 2.77 விழுக்காடு வாக்குகளைக் காங்கிரஸ் பெற்றிருந்தது. இந்த முறை அதிலும் குறைந்து, நோட்டாவைவிட காங்கிரஸ் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக, 2.18 விழுக்காடு வாக்குகளைப் பெற்றதுடன், 4 பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.

ஆனால், இந்த முறை பாஜக பல மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றாலும், தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் பாஜக ஒரு வெற்றிகூட பெறவில்லை.