புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் புதிய அரசு வரும் 29 ஆம் தேதி பதவியேற்கும் என்றும் தொடர்ந்து 5வது முறையாக நவீன் பட்நாயக் முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் பிஜு ஜனதா தளம் தலைமை நேற்று தெரிவித்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜு ஜனதா தளம் எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், சட்டமன்ற கட்சித் தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்படுகிறார். இந்தத் தேர்தலில் நவீன் பட்நாயக், ஹிஞ்சிலி தொகுதியில் பாஜக வேட்பாளர் பீதாம்பர் ஆச்சார்யாவை 60,160 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஒடிசா முதல்வராக 2000ஆம் ஆண்டில் முதல் முறையாக பதவியேற்ற நவீன் பட்நாயக், அதன் பின்னர் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

