உதவியாளரைச் சுட்டோருக்கு மரண தண்டனை; ஸ்மிருதி இரானி சூளுரை

உதவியாளரைச் சுட்டோருக்கு மரண தண்டனை; ஸ்மிருதி இரானி சூளுரை

1 mins read
a76de4bb-651e-413e-aaed-7044a88a5d91
-

பாரதிய ஜனதாவின் தலைவர்களில் ஒருவரான ஸ்மிருதி இரானி, தமது உதவியாளரைக் கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனையைப் பெற்றுத்தர உச்ச நீதிமன்றம் வரை செல்லத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வென்றதை அடுத்து அந்தக் கொலை நடந்தது. முன்னாள் பஞ்சாயத்துத் தலைவராக இருந்த 50 வயது சுரேந்திர சிங், இரவில் தமது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் அவரைத் துப்பாக்கியால் சுட்டதாக அவரது மகன் அபே சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சுரேந்திர சிங்கின் நல்லுடலை அவரது குடும்பத்தாருடன் ஸ்மிருதி இரானி சுமந்து சென்றார். "சுரேந்திர சிங் குடும்பத்தினரின் முன்னிலையில் நான் இந்த உறுதியை மேற்கொள்கிறேன். அவரைச் சுட்டவனுக்கும் அவரைச் சுட உத்தரவிட்டவனுக்கும் மரண தண்டனையை உறுதி செய்ய உச்சநீதிமன்றத்திற்குச் சென்று அதன் கதவுகளைத் தட்ட நான் தயாராக உள்ளேன்," என்று ஸ்மிருதி இரானி கூறினார். ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை 55,000க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வென்றார். சுரேந்திர சிங்கிற்குத் தனிப்பட்ட எதிரிகள் இல்லை என்றும் பாஜகவிற்கு பிரசாரம் செய்ததால் அவர் கொல்லப்பட்டார் என்றும் அவரது மனைவி தெரிவித்தார்.