இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தானியப் பிரதமர் இம்ரான் கான் அழைக்கப்படமாட்டார் என்று இந்திய வெளியுறவு அமைச்சைச் சேர்ந்த அடையாளம் தெரியாத இருவரிடமிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றநிலை இப்போதைக்குத் தணியாது என்பதை இது காட்டுவதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். 'பிரிக்ஸ்' எனப்படும் பொருளியல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளான பங்ளாதேஷ், மியன்மார், இலங்கை, தாய்லாந்து, நேப்பாளம், பூட்டான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் திரு மோடியின் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டனர். கிர்கிஸ்தான், மொரிஷியஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாகிஸ்தான் மட்டும் அழைக்கப்படாது என்று இந்திய வெளியுறவு அமைச்சிலிருந்து தகவல் கசிந்தது. 2014ஆம் ஆண்டில் நடந்த திரு மோடியின் பதவியேற்பு விழாவில் பாகிஸ்தானின் அப்போதையப் பிரதமர் நவாஸ் ஷரிஃப் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவுக்கும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாகிஸ்தானுக்கும் இடையே இதுவரை மூன்று போர்கள் நிகழ்ந்துள்ளன. இவ்வாண்டின் தொடக்கத்தில் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தற்கொலைத் தாக்குதல் நேர்ந்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நான்காவது போர் ஏற்படுமா என்ற அச்சங்கள் நிலவின.
பதவியேற்பு விழா; புறம் தள்ளப்படும் பாகிஸ்தான்
1 mins read
-

