தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் ராகுல் விடாப்பிடி; ஏற்க மறுக்கும் காங்கிரஸ்

தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் ராகுல் விடாப்பிடி; ஏற்க மறுக்கும் காங்கிரஸ்

3 mins read

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருக் கிறார். ஆனால், அதை ஏற்க மறுத்து, அம்முடிவைக் கைவிடும் படி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ராகுலை வலி யுறுத்தி வருகின்றனர்.

அண்மையில் நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஜக்கிய முற்போக்குக் கூட்டணி படுதோல்வி கண்டது. பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

இதையடுத்து, தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத் தில் கடிதம் கொடுத்தார் ராகுல் காந்தி. ஆயினும், அதை ஏற்க மறுத்த செயற்குழு உறுப்பினர்கள், மாறாக கட்சியைச் சீரமைக்கும் பணியில் அவருக்கு முழு சுதந் திரம் அளித்து தீர்மானம் நிறை வேற்றினர்.

இருப்பினும், தலைவர் பதவி யிலிருந்து விலகும் முடிவில் ராகுல் விடாப்பிடியாக உள்ளார்.

இதையடுத்து, புதிய தலை வரைத் தேர்வுசெய்யும் பொருட்டு ஜூன் 1ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு மீண்டும் கூடவிருப்ப தாகச் செய்திகள் வெளியாகின.

ஆனால், அந்தச் செய்தியை காங்கிரஸ் மறுத்துள்ளது.

"அப்படி எதுவும் திட்டமில்லை. செயற்குழு கூடவிருப்பதாக வெளி யான செய்திகளில் துளியும் உண்மையில்லை," என்று காங் கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். பெயர் வெளியிட விரும்பாத இன் னொரு காங்கிரஸ் தலைவரும் இதை உறுதிசெய்ததாக 'இந்துஸ் தான் டைம்ஸ்' செய்தி கூறியது.

இதற்கிடையே, ஜார்க்கண்ட், அசாம், பஞ்சாப் மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களும் பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ளனர். முன்னதாக, தோல்விக்குப் பொறுப் பேற்று மகாராஷ்டிரா, உத்தரப் பிர தேசம், ஒடிசா ஆகிய மாநில காங் கிரஸ் தலைவர்களும் பதவியைத் துறந்திருந்தனர். கர்நாடக காங் கிரஸ் தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவர் எச்.கே.பாட்டீலும் தமது பதவியிலிருந்து விலகினார்.

அதேபோல, அமேதியில் ராகுல் தோற்றதை அடுத்து அம்மாவட்ட காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஸ்ராவும் பதவி விலகினார்.

முன்னதாக, "காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் விலகுவது தற்கொலைக்குச் சமம்," என்று முன்னாள் பீகார் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

"பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் பொதுவான நோக்கம் நிறைவேறவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவர் நியமிக்கப்பட்டால் அவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி யால் இயக்கப்படும் 'பொம்மைத் தலைவர்' என பாஜக கூறும். இதற்கு ராகுல் ஏன் வாய்ப்புத் தர வேண்டும்?" என்றார் லாலு.

இந்த நிலையில், ராகுலின் சகோதரி பிரியங்கா, ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், உள்ளிட்டோர் ராகுலுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர்.

ஸ்டாலின் சமாதானம்

இதனிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வழி ராகுலிடம் பேசியதாகவும் அப்போது காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என வலியுறுத்தியதாகவும் தமிழக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. "தேர்தலில் தோற்றாலும் மக்களின் மனங்களை வென்றுள்ளீர்கள்," என்று ராகுலிடம் ஸ்டாலின் கூறிய தாகச் சொல்லப்படுகிறது.