இந்தியாவுக்கு முன்னுரிமை கொடுக்கும் வர்த்தகத் திட்டத்தைத் தற்காலிகமாக ரத்து செய்திருந்த அமெரிக்கா, தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது இரண்டாவது தவணைக்காலத்தைத் தொடங்கியுள்ள வேளையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இவ்வாண்டு மார்ச் மாதத்தில் 'ஜிபிஎஸ்' எனப்படும் முன்னுரிமைத் திட்டத்திலிருந்து இந்தியாவை நீக்குவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவுக்கு 5.6 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தத் திட்டம் அனுமதி அளிக்கிறது. 1970களிலிருந்து இந்தியாவுக்கு அமெரிக்கா இந்தச் சலுகையைக் கொடுத்து வந்தது. இந்த அளவிலான சலுகை அமெரிக்காவுக்குப் பாதகமாக இருப்பதாக அந்நாட்டின் அதிபர் டிரம்ப் கருதுகிறார்.
அமெரிக்க இறக்குமதிகளின் மீது இந்தியா விதிக்கும் வரிகள் மிக அதிகம் என அமெரிக்கா குறைகூறியுள்ளது. ஆயினும், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியச் சந்தைகளில் நியாயமான முறையில் கால்பதிக்கும் வாய்ப்பை இந்தியா வழங்கினால் அந்நாட்டுக்கு இச்சலுகை மீண்டும் வழங்கப்படலாம் என்று அந்த அதிகாரி கூறினார். "கொள்கை மறுஆய்வு, தரவுகளை உள்ளூர்மயப்படுத்தல், இணைய வர்த்தக வழிமுறைகள் ஆகியவை குறித்து இந்தியா நடவடிக்கை எடுக்கத் தயார் என்றால் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம் என நாங்கள் நம்புகிறோம்," என்றார் அவர்.
அமெரிக்காவின் கொள்கைகள் நியாயமற்றது என்று பதிலுக்குக் கூறுகிறது இந்தியா.

