2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 920 மில்லியன் கைத்தொலைபேசி பயனீட்டாளர்களும் 88 மில்லியன் 5ஜி இணைப்புகளும் இருக்கப்போவதாக உலக தொலைத்தொடர்புத்துறை அமைப்பான 'ஜிஎஸ்எம்ஏ' முன்னுரைத்துள்ளது. 4ஜி சேவையைப் பயன்படுத்துவோரில் பலர் புதிய 5ஜி கருவிகளையும் சேவைகளையும் பயன்படுத்துவர் என்று 'ஜிஎஸ்எம்ஏ' முன்னுரைத்துள்ளது. ஆயினும், 5ஜி சுற்றுச்சூழலை உருவாக்குவது இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் முதலீட்டு ஆற்றலையும் அரசாங்கத்தின் கொள்கை ரீதியான ஆதரவையும் பொருத்திருப்பதாக 'ஜிஎஸ்எம்ஏ' கூறியது.
இருநூற்றுக்கும் அதிகமான நாடுகளை உள்ளடக்கிய 'ஜிஎஸ்எம்ஏ' கருத்தாய்வின்படி, இந்தியா உலகில் ஆக விலை குறைவான சந்தைகளில் ஒன்றாக இருக்கிறது. 2018ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் 1 'கிகாபைட்' தரவின் சராசரி உலகளாவிய விலை 8.35 அமெரிக்க டாலர் என்றும் அதே காலக்கட்டத்தில் இந்தியாவிலிருந்த சராசரி விலை 18.5 ரூபாய் என்றும் கருத்தாய்வு குறிப்பிடுகிறது. இந்தியாவின் இந்த மிகக் குறைவான கட்டணம் ஏழைகளுக்குப் பலனளித்தாலும் அந்நாட்டின் தொலைத்தொடர்புத் துறையின் நிலைத்தன்மையைப் பாதிப்பதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

