எடப்பாடி: மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறேன் எனச் சொல்லவில்லை

எடப்பாடி: மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறேன் எனச் சொல்லவில்லை

2 mins read
8c351ae4-baf4-4e60-b97d-3ae3078e79e2
-

தமிழ், ஆங்கிலம், இந்தி என்ற மும்மொழிக் கொள்கையைத் தமிழகக் கல்வி முறையில் அறிமுகம் செய்வதைத் தாம் ஆதரிப்பதாக ஊடகங்கள் கூறுவது தவறு என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறேன் என்று நான் எந்தப் பத்திரிகையிலும், ஊடகத்திலும் சொல்லவில்லை,ஞ என்று அவர் சென்னையிலிருந்து கோவைக்குச் சென்றபோது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்:

"நான் டுவிட்டரில் தான் கருத்து சொன்னேன். டெல்லியில் பிரதமர் மோடி பதவி ஏற்ற நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது அங்கே இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் என்னைச் சந்தித்து பேசினார்கள். அப்போது நானும் அவர்களுக்கு வாய்ப்பு அளித்து என்ன கோரிக்கை என்று கேட்டேன். அதற்கு அவர்கள் எங்கள் குழந்தைகள் தமிழ்க் கல்வி பயின்று வருகிறார்கள். அந்தப் பள்ளியில் 8-ம் வகுப்பு ஆசிரியர் திடீரென்று நிறுத்தப்பட்டு விட்டார். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது."

"இதேபோல பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக தமிழ் படித்து வருகிறார்கள். இப்படி தமிழ் பேசுகிற நம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேறு மாநிலத்தில் வசிக்கும்போது தமிழ் வழியில் படிக்க வைக்க ஆசைப்படுகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் அனைத்து மாநிலங்களிலும் விருப்பப் பாடமாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்" என்றார் திரு பழனிசாமி.

டுவிட்டரில் தாம் கூறியதில் தவறு ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்தார். வேறு மாநிலங்களில் தமிழ் விருப்பப்பாடமாகக் கற்பிக்கப்படுவதுபோல் தமிழகத்தில் விருப்பப்பாடங்களை உருவாக்கக் கேட்டது மும்மொழிக் கொள்கையாகத் திரிக்கப்பட்டிருப்பதாகத் திரு எடப்பாடி தெரிவித்தார். இதனால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதாயம் அடைவதாக அவர் குற்றம் சாட்டினார்.