தஞ்சாவூர்: விளார் வடக்குக் காலனியைச் சேர்ந்தவர் தர்மராஜ் என்பவரின் மகன்ஆனந்தபாபு, 33. சமூக ஆர்வலர். மேலும் அந்தப் பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் செயல்பாட்டாளராகவும் இருந்தார். அதே கிராமத்தை சேர்ந்த குமார், 48, அவரது மகன்கள் கோகுல்நாத், கோபிநாத், ஸ்ரீநாத் ஆகியோர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் உள்ள குழாயிலிருந்து பெரிய சின்டெக்ஸ் தொட்டி ஒன்றில் தண்ணீர் பிடித்தனர். தண்ணீர்ப் பிரச்சினை இருக்கும் நிலையில் இப்படித் தொட்டியில் தண்ணீர் பிடிப்பதைத் தட்டிக்கேட்டார் ஆனந்த பாபு. இரு தரப்புக்கிடையே வாக்குவாதம் முற்றியது.
ஆத்திரம் அடைந்த குமாரும் அவரது மகன்களும் உருட்டுக் கட்டை, அரிவாளால் ஆனந்த பாபுவை தாக்கினர். இதைத் தடுக்க வந்த ஆனந்த்பாபுவின் தந்தை தர்மராஜையும் அவர்கள் தாக்கினர். ஆனந்தபாபுவும் தர்மராஜும் பலத்த காயம் அடைந்தனர். ஆனந்தபாபு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்து போனார். தர்மராஜ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

