கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் இரு அரசியல் கட்சித் தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். மக்களவைத் தேர்தலின்போது பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளின் தொண்டர்கள் பல இடங்களில் மோதிக்கொண்டனர். பலர் மாண்டனர்.
தேர்தல் முடிந்த பின்னரும் அவர்களுக்கு இடையிலான மோதல் தொடர்ந்து வருகிறது. 24 பர்கனஸ் மாவட்டம் சந்தேஷ்கலி என்னும் இடத்தில் நேற்று முன்தினம் அவர்கள் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டு கலகத்தில் ஈடுபட்டனர். கட்சிக் கொடிகளை அகற்றுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் கலகமாக மாறியது. ஒருவர் மீது ஒருவர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கிக்கொண்டனர். அப்போது துப்பாக்கிகளாலும் சுட்டுக் கொண்டனர்.
துப்பாக்கியால் சுடப்பட்டதில் நால்வர் உயிரிழந்தனர். அவர்களில் மூவர் பா-ஜகவைச் சேர்ந்தவர் என்று உள்ளூர் பாஜக தலைவர் முகுல் ராய் தெரிவித்தார். அவர்களின் பெயரையும் அவர் வெளியிட்டார். சுகந்தா, மோண்டர் பிரதீப், ஷங்கர் ஆகிய மூவரும் திரிணாமூல் கட்சியினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர் கூறினார். அதே நேரம் தங்களது கட்சியைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டதாக திரிணாமூல் காங்கிரசின் அமைச்சர் ஜோதிப்ரியோ முல்லிக் கூறினார். மேற்கு வங்காளத்தில் அமைதியை சீர்குலைக்க பாஜக முயன்று வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
கலகத்தைத் தடுக்க வந்த போலிசாருக்கும் கட்சியினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது போலிசாரின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. போலிசையும் அவர்களது வாகனங்களையும் பாஜக தொண்டர்கள் தாக்கியதாக திரிணாமூல் கட்சிப் பிரமுகர்கள் தெரிவித்தனர். அந்த அடிதடி கலகத்தில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் காயமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து நேற்றும் சந்தேஷ்கலி பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. நூற்றுக்கு மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டனர்.

