பாட்னா: பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்புகள் அறியப்பட்ட 38 குழந்தைகள் முசாஃபர்பூரில் உள்ள அரசு மருத்துவமனையான ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவர்களில் 14 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் சுனில் ஷாஹி கூறினார். பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகள் தனிவார்டில் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைவாக இருந்ததாக முசாஃபர்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூளைக்காய்ச்சலுக்கு குழந்தைகள் பலியாகி வருவது பீகார் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

