சென்னை: மத்திய அமைச்சரவையில் திமுக சேரப்போவதாக வெளியான செய்தி குறித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பதிலளித்
துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "நாடாளுமன்றம் ஒவ்வொரு முறையும் கூடும் முன் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்ற அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற ஆதரவு கேட்பது வழக்கமான ஒன்று.
"அந்த நடைமுறைப் பழக்கப்படி நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இணை அமைச்சர் அர்ஜுன்ராம் ஆகியோர் என்னைச் சந்தித்துப் பேசினர். ஆனால் ஆறு மாதம் கழித்து திமுக உறுப்பினர்கள் பாஜக மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்ற நாளேட்டின் யூகச்செய்தி கடைந்தெடுத்த, கலப்படமற்ற பொய்," என்று கூறியுள்ளார்.
முன்னதாக நேற்றுக் காலை நாளேட்டில் செய்தி வெளியானதும் தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. அதிமுகவை கைகழுவிவிட்டு திமுகவின் நட்பை பாஜக நாடுவதுபோல பல ஊகங்கள் கிளம்பின.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதிமுக- பாஜக கூட்டணி ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது.

