இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த இரண்டு வயது சிறுவன், 109 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், அவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சங்ரூர் மாவட்டத்தின் பகவான்புரா கிராமத்தில் ஃபதேவீர் சிங் எனும் பெயர் கொண்ட அச்சிறுவன் கடந்த வியாழக்கிழமை மாலை வேளையில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தான். அருகில் ஏழு அங்குல அகலம் மட்டுமே கொண்ட ஆழ்துளைக் கிணறு துணியால் மூடிவைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் சிறுவன் தவறி விழுந்துவிடவே அவனது தாய் காப்பாற்ற முயன்றுள்ளார்.
ஆனால் ஆழ்துளைக் கிணற்றுக்குள் 125 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட சிறுவனை மீட்க கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தச் சிறுவனுக்கு உணவோ தண்ணீரோ வழங்க முடியாத நிலையில் பிராணவாயு மட்டும் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், 109 மணி நேரத்திற்குப் பிறகு நேற்றுக் காலை அச்சிறுவன் மீட்கப்பட்டான்.
அங்கேயே முகாமிட்டிருந்த மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவ அவசர வாகனம் மூலம் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது.
அச்சிறுவனின் மரணம் தேசிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உரிய நேரத்தில் அவனை மீட்டு உயிரைக் காப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தோல்வியடைந்தது குறித்து அப்பகுதி மக்கள் கொந்தளிக்கின்றனர்.

