குஜராத்தில் பேய்க்காற்று, பெருமழை: 'வாயு' புயல் கரை கடந்தாலும் நாளை வரை பாதிப்பு

குஜராத்தில் பேய்க்காற்று, பெருமழை: 'வாயு' புயல் கரை கடந்தாலும் நாளை வரை பாதிப்பு

2 mins read
6dc6ad29-2170-4325-9320-3c8981b821aa
ஏற்கெனவே கடலுக்குச் சென்ற மீனவர்களும் அவசரமாகத் திருப்பி அழைக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

வாயு என பெயரிடப்பட்ட புயல் அரபிக் கடலில் அதிதீவிரமாக மாறியது. கடுமையான புயல் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள வாயு புயல் புதன்கிழமை இரவு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது. அப்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் குஜராத் மாநிலம் முழுவதும் பலத்த காற்று வீசியது.

இருப்பினும் நேற்று பிற்பகல் கரையைக் கடக்கும் வேளையில் வாயு புயல் குஜராத்தைத் தாக்காது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னுரைப்பை வெளியிட்டது.

குஜராத்தின் கடற்கரை பகுதிகளான வெராவல், போர்பந்தர் மற்றும் துவாரகையை ஒட்டியே புயல் கடந்து செல்லக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேநேரம், புயல் கரையை நெருங்கும்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் மையம் கூறியது.

நேற்று பகலில் மணிக்கு 135 கி.மீ. முதல் 145 கி.மீ. வரையிலான காற்று வீசியது.

பின்னர் அது மேலும் வலுவடைந்து மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. அதனால் ஏராளமான மரங்கள் சாய்ந்தன.

புயலால் உருவான கனமழை நாளை சனிக்கிழமை வரை பெய்யும் என்று மையத்தின் குஜராத் மாநில தலைவர் ஜெயந்த சர்க்கார் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 285,000 மக்கள் பத்திரமாக இடமாற்றம் செய்யப்பட்டதாக மாநில அரசு அதிகாரிகள் கூறினர்.

இந்திய கடலோரக் காவற்படை, கடற்படை, விமானப்படை ஆகியன தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் புயல் பாதிப்புகளைத் தவிர்க்க பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். குஜராத் மாநிலம் நேற்று பெரும் பதற்றத்தில் உறைந்திருந்தது.

புயல் கடுமையாகத் தாக்கக்கூடும் என்ற அச்சத் தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனால் நூற்றுக் கணக்கான மீன்பிடி படகுகள் வெராவல் கடற்கரையில் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டன.