இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 40,000 யோகாசனப் பிரியர்களுடன் கூடி அனைத்துலக யோகாசன தினத்தை வெள்ளிக்கிழமை காலை அனுசரித்தார். நோய்கள் வருமுன் காக்க மக்களை யோகாசனத்தில் ஈடுபடுத்த அரசாங்கம் முயன்று வருவதாகத் திரு மோடி அந்நிகழ்ச்சியில் கூறினார்.
இதயப் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் இளையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து திரு மோடி தமது கவலையை வெளிப்படுத்தினார். "இதனைச் சமாளிக்க யோகா பெரும் பங்காற்றலாம். எனவே இவ்வாண்டின் கருப்பொருள் 'இதயத்திற்கான யோகா'" என்று அவர் அந்த நிகழ்ச்சியில் உரையாற்றியபோது கூறினார். சமயங்களுக்கு அப்பாற்பட்ட யோகாசனத்தைச் சமுதாயத்திலுள்ள அனைவரும் மேற்கொள்ளவேண்டும் என்றும் திரு மோடி மக்களைக் கேட்டுக்கொண்டார். யோகாவைப் பிரபலப்படுத்த அதற்கான கட்டமைப்பு பலப்படுத்தப்படவேண்டும் என்றும் அதற்காக அரசாங்கம் முயற்சிகள் எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
"யோகாவுடன் அமைதியும் ஒற்றுமையும் பின்னிப் பிணைந்திருக்கின்றன," என்றார் அவர்.

