இந்தியாவின் உடனடி முத்தலாக் முறையைத் தடைசெய்யும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று முறை 'தலாக்' எனக் கூறி மனைவியைக் கணவன் உடனடியாக விவாகரத்து செய்யும் முறையைச் சிறைத்தண்டனைக்குரிய குற்றமாக மாற்ற இந்த மசோதா முனைகிறது. முத்தலாக் மசோதாவுக்கு நாடாளுமன்ற கீழவை முன்னதாக ஒப்புதல் அளித்திருந்தபோதும் மாநிலங்கள் அவையில் அது நிலுவையில் இருந்தது. கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்னர் கீழவை கலைக்கப்பட்டபோது அந்த மசோதா ரத்து செய்யப்பட்டது.
மசோதாவின்படி உடனடி முத்தலாக் செய்யும் ஆண்கள் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்நோக்கலாம். முத்தலாக்கை சிறைத்தண்டனைக்குரிய குற்றமாக்குவது குறித்து இந்திய எதிர்க்கட்சிகள் ஆட்சேபித்து வருகின்றன. இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சங்களைப் போக்கடிக்க ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா, முத்தலாக் மசோதாவில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.
மசோதாவை இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்த அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், இந்தச் சட்டத்தால் முஸ்லிம் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தார். ஆயினும், இந்திய நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட முத்தலாக் முறையை தண்டனைக்குரிய குற்றமாக்குவதன் மூலம் முஸ்லிம் ஆண்கள் குறிவைக்கப்படுவதாக காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் குற்றம் சாட்டியுள்ளார்.

