அமராவதி: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடு வசிக்கும் வீடு சுற்றுச்சூழல் விதிகளை மீறி ஆற்றுப் படுகையில் கட்டப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
எனவே அது சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டடம் என்று ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மங்களகிரி தொகுதி எம்எல்ஏ ராம கிருஷ்ணா குற்றம்சாட்டி உள்ளார்.
குறிப்பிட்ட அந்தக் கட்டடத்தில் இருந்து சந்திரபாபு நாயுடுவை வெளி யேற்ற அரசு அனைத்து சட்டபூர்வ நடவடிக்கை களும் மேற்கொள்ளும் என்றும், குறிப்பிட்ட அந்தப் பகுதியில் உள்ள சட்ட விரோத கட்டடங்கள் அனைத்தும் இடிக்கப்படும் வரை சட்டப்போராட்டம் தொடரும் என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப் பிட்டுள்ளார்.
குண்டூர் மாவட்டம், மங்களகிரி பகுதியில் தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இதை கடந்த ஆட்சிக் காலத்தில் ஆந்திர அரசு முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்துக்காக குத்தகைக்கு எடுத்தது.
தேர்தலில் தோல்வி கண்டதையடுத்து அந்த வீட்டிலேயே தாம் தொடர்ந்து குடியிருக்க விரும்புவதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். இது குறித்து அரசுக்கும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் ஆந்திர அரசு இக்கோரிக்கையைப் பரிசீலிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

