தலைக்கவசம் அணியாத பெண் ஓட்டுநர்களுக்கு ரோஜா மலர்

போக்குவரத்து விதிகளை மீறும் பெண்கள் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் (முன்னாள் அலகாபாத்) நகரில் புதுமையான முறையில் தண்டிக்கப்படுகிறார்கள். தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் செல்லும் பெண்களை வழிமறிக்கும் போக்குவரத்து போலிசார் அவர்களுக்கு அபராதம் விதிப்பர். 

அதேநேரம் போலிசாருடன் அணிசேர்ந்திருக்கும் பொதுநலத் தொண்டர்கள் அந்தப் பெண்களுக்கு ரோஜா பூக்களைக் கொடுப்பார்கள். மேலும் அந்த ரோஜாவை அணியச் செய்து அவர்களின் முகத்தை கண்ணாடியில் காட்டுவார்கள். விதிகளை மீறியதற்காக தாங்கள் இவ்வாறு செய்யப்படுகிறோம் என்பதை உணர்ந்து அந்தப் பெண்கள் மீண்டும் அதே தவற்றைச் செய்யாமல் இருக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலிசார் கூறினர். இடைவார் அணியாமல் கார் ஓட்டிச் செல்லும் பெண்களும் இவ்வாறு புதுமையாக தண்டிக்கப்படுகிறார்கள். 

அண்மையில் தொடங்கப்பட்ட இந்நடவடிக்கைக்கு நல்ல பலன் கிட்டி வருவதாக பிரயாக்ராஜ் நகர போக்குவரத்து போலிசின் கூடுதல் கண்காணிப்பாளர் ஆர் பி டோஹ்ரே கூறினார். இந்தப் புதுமையான தண்டனை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார் அவர்