இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜி20 உச்சநிலை மாநாட்டுக்காக ஜப்பானுக்குச் சென்றிருக்கிறார். அங்கே அவர், அதிபர் டோனல்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களைச் சந்திக்கவுள்ளார். திரு மோடி ஜி20 மாநாட்டுக்குச் செல்வது இது ஆறாவது முறையாகும்.
பெண்ணுரிமை முன்னேற்றம், செயற்கை நுண்ணறிவு, பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் பன்னாட்டு முயற்சிகள் ஆகியவற்றின்மீது கவனம் செலுத்தப்போவதாகத் திரு மோடி இந்தியாவைவிட்டுப் புறப்படும் தருவாயில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"பன்னாட்டு ஒத்துழைப்புக்கு எங்களது ஆதரவை உறுதி செய்யும் வாய்ப்பினை இந்த உச்சநிலை மாநாடு வழங்கும். வேகமாக மாறிவரும் இன்றைய உலகில் விதிமுறைகள் அடிப்படையிலான அனைத்துலக ஒழுங்கிற்குப் பன்னாட்டு ஒத்துழைப்பு மிக அவசியம்," என்றார் திரு மோடி.
2022ஆம் ஆண்டில் இந்தியா 'ஜி20' மாநாட்டை நடத்தவுள்ளது. அதற்கு ஒசாகா நகரில் நிகழவிருக்கும் மாநாடு ஒரு முக்கிய படிக்கல் என்று திரு மோடி கூறினார்.

