இந்தியாவின் ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சி பேச்சாளர் விகாஷ் சௌத்ரி, 38, காலையில் அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஃபரிதாபாத் நகரில் உள்ள ஓர் உடற்பயிற்சிக்கூடத்திற்கு வெளியே தமது காரை அவர் நிறுத்தியபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காரில் வந்த இருவர் திரு விகாஷை நோக்கி பலமுறை சுட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது. திரு விகாஷினுடைய காரின் இரு பக்கமிருந்தும் அவர்கள் சுடுவதை அந்தக் காணொளி காட்டுகிறது. உடனடியாக திரு விகாஷ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. "மருத்துவர்கள் தங்களால் முடிந்த அளவு போராடினர். ஆயினும், திரு விகாஷின் உடலைப் பல குண்டுகள் துளைத்திருந்ததால் அவரை எங்களால் காப்பாற்ற முடியாமல் போனது," என்று டாக்டர் சௌரப் தெரிவித்தார்.
இளம் அரசியல்வாதியான திரு விகாஷின் உடலில் எத்தனை குண்டுகள் பாய்ந்திருந்தன என்பது உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும் எனக் கூறப்பட்டது. திரு விகாஷ், ஹரியானா காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வாருக்கு மிக நெருக்கமானவர் எனச் சொல்லப்படுகிறது. இந்திய தேசிய லோக் தளக் கட்சியின் மூலம் அரசியலில் அடியெடுத்து வைத்த திரு விகாஷ், கடந்த 2015ஆம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார்.
திரு விகாஷ் கொல்லப்பட்டதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த திரு அசோக், "ஹரியானாவில் காட்டு அரசாங்கம் நடக்கிறது. சட்டத்தைக் கண்டு எவருக்கும் அச்சமில்லை. நேற்றும் (செவ்வாய்க்கிழமை) இதுபோன்றதொரு சம்பவம் இங்கு நிகழ்ந்தது. தன்னை மானபங்கம் செய்ய முயன்றதைத் தடுத்த பெண் ஒருவருக்குக் கத்திக்குத்து விழுந்தது. இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்," என்றார்.
"ஃபரிதாபாத்தில் காங்கிரஸ் பேச்சாளர் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்க, அவமானகரமான, வருத்தத்திற்குரிய சம்பவம். ஹரியானாவில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு வருவதையே இது காட்டுகிறது," என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
திரு விகாஷை சுட்டவர்கள் யார் என்பதை போலிசார் இன்னும் கண்டறியும் பணியை போலிசார் பேற்கொண்டுள்ளனர்.

