காஞ்சிபுரத்தின் மிகப் பழமையான விஷ்ணு கோயிலான வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் திருவிழா இன்று தொடங்குகிறது. அந்தக் கோயிலின் குளத்திலிருந்து அத்திவரதரின் திருவுருவம் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுவது வழக்கம். 1979ஆம் ஆண்டில் இந்தத் திருவிழா கடைசியாக நடைபெற்றது.
இந்த 48 நாள் திருவிழாவில் பங்கேற்க இந்துக்கள் பல்வேறு இடங்களிலிருந்து காஞ்சிபுரத்தில் திரண்டுள்ளனர். திருவிழாவின்போது ஒவ்வொரு நாளும் 50,000க்கும் 70,000க்கும் இடையிலான பக்தர்கள் இங்கு கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்து அடி நீளமுள்ள இந்தப் பெருமாளின் திருவுருவம் அத்தி மரத்தால் செய்யப்பட்டதால் அவருக்கு அந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
அத்திவரதர் திருவுருவத்தை வெளியேற்றும் நிகழ்வை ஒருவர் தம் வாழ்நாளில் அதிகபட்சமாக இரண்டு முறைதான் காண முடிகிறது. எனவே இந்தத் திருவிழாவுக்கான ஆயத்தப் பணிகளும் தளவாடப் பணிகளும் மிகுந்த கவனிப்புடன் கையாளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

