தண்ணீர்த் தட்டுப்பாட்டை சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கும் நிலையில் சென்னைவாசிகள் வேறொரு பிரச்சினையை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. முன்னதாக தங்களது முழுச் சம்பளம் கொடுக்கப்படாதது தொடர்பில் 23,000 போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயினும், பிற்பகல் அளவில் அந்த ஊழியர்கள் தங்களது போராட்டத்தை மீட்டுக்கொள்ள முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளனர்.
ஊழியர்களில் மூன்றில் இருவருக்குச் சம்பளம் ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சியுள்ளோர் இன்றைய தினத்திற்குள் தங்களது சம்பளத்தைப் பெறுவர் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களில் வங்கிகள் அடைக்கப்பட்டது இந்தத் தாமதத்திற்கான காரணம் என்றும் தமிழக அரசாங்கம் கூறியது.
"இந்த வேலை நிறுத்தத்தை வதந்தி ஒன்று கிளப்பியுள்ளது," என்று அரசாங்க உயர் அதிகாரி ஒருவர் என்டிடிவி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
வேலை நிறுத்தப் போராட்டத்தால் சாலையில் செல்லும் 3,200 பேருந்துகளின் வழக்கமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்களும் அலுவலக ஊழியர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் கூறின. ரயில் மற்றும் டாக்சி சேவைகளின் மீதான நெருக்கடி இதனால் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. பொதுமக்களின் கவலையை நினைத்து எவரும் கவலைப்படுவதில்லை என்பது மக்கள் சிலரின் ஆதங்கம்.
கடந்த ஆண்டு இதுபோன்ற ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தை இருந்த மாநிலப் போக்குவரத்து ஊழியர்கள் ஏற்பாடு செய்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகு அந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

