புதுடெல்லி: மார்பகத்தில் உள்ள கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையின்போது சிகிச்சை பெற்ற பெண்மணியுடன் மருத்துவர்களும் இணைந்து பாடிய சம்பவம் கோல்கத்தாவில் நிகழ்ந்துள்ளது.
ஐம்பது வயதான மௌசுமி கோஸ்வாமி என்ற பெண்மணிக்கு இந்த அறுவை சிகிச்சை நடந்தது. இவரது கணவர் ஓராண்டுக்கு முன்பு புற்றுநோயால் இறந்ததை அடுத்து மன அழுத்தம், தைராய்டு உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் அவரது மார்பகத் தில் கட்டி உருவானது. அதை அகற்றுவதன் மூலம், புற்றுநோய்க் கட்டியா என்பதை உறுதி செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால் மௌசுமியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு மயக்க மருந்து, வலி நிவாரணியை அதிக அளவில் அளிக்காமலேயே அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவானது.
மௌசுமி இசைத்துறையில் பட்டம் பெற்றதை அறிந்த மருத்துவர், சிகிச்சையின்போது மனம்விட்டு பாடும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
அது மட்டுமல்ல, அவருடன் சிகிச்சை அளித்த இரு மருத்து வர்களும் சேர்ந்து பாடியுள்ளனர்.
"இதன் மூலம் ஏதோ ஒரு கச்சேரியில் பாடியதுபோல் உணர்ந்தேன். எனக்கு அறுவை சிகிச்சை நடப்பதையே சில நொடிகளுக்கு நான் மறந்துபோனேன். மருத்துவர்களுக்கு நன்றி," என்கி றார் மௌசுமி. கோல்கத்தாவில் உள்ள சரோஜ் குப்தா புற்று நோய் சிகிச்சை மையத்தில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

