புதுடெல்லி: தொழில்நுட்ப வசதிகள் நாட்டில் அந்நியப்பட்டுக் கிடந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவ்வசதிகள் அனைவருக்கும் எளிதாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே டிஜிட்டல் இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இத்திட்டத்தால் மக்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது என்றும், ஊழல் கணிசமாகக் குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஏழைகளுக்கு அரசு மானியம் வழங்குவது மேம்பட்டுள்ளது என்றும் பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். டிஜிட்டல் இந்தியா திட்டம் துவங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி. இத்திட்டத்தின் மூலம் மக்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப் பிட்டுள்ளார்.
"டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் அரசு நலத்திட்ட மானியங்கள், ஏழை மக்களைச் சென்றடைவது மேம்பட்டுள்ளது. இத்திட்டம் மக்கள் பலத்தின் ஆதரவுடன் ஓர் இயக்கமாகக் கொண்டு வரப்பட்டது. "இத்திட்டத்தைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் பல தொழில்நுட்பங்களைப் புதிதாகக் கற்றுக் கொண்ட அனைவரையும் வணங்குகிறேன். இத்திட்டம் வலுப்பெற வருங்காலத்தில் மக்கள் முன் னெடுக்கப் போகும் முயற்சிகளுக் கும் நன்றி தெரிவிக்கிறேன்," என்று பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

