புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவியில் நீடிக்க ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதையடுத்து அக்கட்சியின் புதிய தலைவராக சுசீல் குமார் ஷிண்டே தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோல்வியடைந்தார்.
இதையடுத்து டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எனினும் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் அவரது முடிவை ஏற்க மறுத்தனர். இதையடுத்து கடந்த சில வாரங்களாக ராகுலை சமாதானப்படுத்தும் முயற்சி நீடித்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தன்னைப் போன்று கட்சிப் பதவியில் இருந்து வேறு எந்த நிர்வாகியும் பதவி விலகவில்லை என்றும் ராகுல் மறைமுகமாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் சுமார் 250 பேர் கட்சிப் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் 4 மாநிலங்களின் முதல்வர்கள் ராகுலைச் சந்தித்துப் பேசினர். அப்போது கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து ராகுல் தற்போது விலகுவது சரியான முடிவல்ல என்றும், பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். எனினும் ராகுல் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும், அப்போது தேசிய தலைவர் பதவிக்கு மூன்று மூத்த தலைவர்களின் பெயர்களைப் பரிசீலித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆலோசனையின் முடிவில், சுசீல்குமார் ஷிண்டேவை தேசிய தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

