இந்தியா வேகமாக வளர்ந்துவரும் பொருளியலாகத் தொடர்ந்து இருக்கிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். ஆயினும், இந்தியாவின் உற்பத்தித்துறை சற்று மந்தம் அடைந்திருப்பதாகத் திருவாட்டி நிர்மலா கேள்வி நேரத்தின்போது கூறினார். ஆனால், இதற்குப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமல்ல என்று அவர் கூறினார்.
அரசாங்கத்தின் திட்டத்தில் பொருளியல் வளர்ச்சி பிரதானமாகக் கருதப்படுவதாக அவர் வலியுறுத்தினார். மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை அதிகரிக்க பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் நேற்று நிகழ்ந்த கேள்வி பதில் அங்கத்தில் தெரிவித்தார்.
2016, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்கப் பொருளியல் வளர்ச்சி முறையே 1.6 விழுக்காடு, 2.2 விழுக்காடு, 2.9 விழுக்காடு, 2.3 ஆகியவற்றுக்கு இடையே இருப்பதாகத் தெரிவித்தார். சீனாவின் பொருளியல் அதே காலக்கட்டத்தில் 6.7 விழுக்காட்டிலிருந்து 6.3 விழுக்காட்டுக்குக் குறைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் இந்தியாவின் வளர்ச்சி 7.3 விழுக்காட்டை எட்டியிருப்பதாக அவர் கூறினார்.
வளர்ச்சி விவகாரங்கள் மீது கவனம் செலுத்த இந்திய அரசாங்கம், ஐந்து உறுப்பினர் கொண்ட அமைச்சரவை செயற்குழுவைத் தொடங்கியுள்ளதாகவும் அந்தக் குழுவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே தலைமைத் தாங்குவார் என்றும் திருவாட்டி நிர்மலா கூறினார்.

