இந்திய அணியின் வெற்றிக்காக ஆசிர்வதித்த பாட்டிக்கு இலவச டிக்கெட்

இந்திய அணியின் வெற்றிக்காக ஆசிர்வதித்த பாட்டிக்கு இலவச டிக்கெட்

1 mins read
0e4557eb-94bb-4bb1-bf69-22638e02c98d
-

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலியை வாழ்த்திய 87 வயது மூதாட்டி சாருலதா பட்டேலுக்கான நுழைவுச்சீட்டு செலவுகளை ஏற்க பெருவணிகர் ஆனந்த் மகிந்திரா முடிவு செய்திருக்கிறார். இந்தியக் கொடியின் மூன்று வண்ணங்களைக் கொண்ட துப்பட்டாவை அணிந்திருந்த அவர், சக்கர நாற்காலியில் அமர்ந்து கோலியைப் பாசத்துடன் அரவணைப்பதைக் காட்டும் படம் இணையவாசிகளை மலைக்கச் செய்தது.

செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் இந்தியா பங்ளாதேஷை 28 ஓட்டங்களில் வென்றதற்குக் கைகொடுத்தது அந்த மூதாட்டியின் ஆசிர்வாதமே என்று திரு மகிந்திரா டுவிட்டரில் தெரிவித்தார். உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்திலும் இறுதி ஆட்டத்திலும் அந்தப் பாட்டி கலந்துகொண்டாகவேண்டும் என அவர் கோரினார். "பாட்டிக்கான டிக்கெட்டை வாங்க நீங்கள் தயாரா" என்று கேட்ட இணையவாசி ஒருவருக்கு அவர் ஆம் என பதிலளித்தார்.

பல ஆண்டுகளாகக் கிரிக்கெட் பார்த்து வருவதாகக் கூறிய திருவாட்டி பட்டேல் என்ற அந்தப் பாட்டி, 1983ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு ஆதரவாக விளையாட்டரங்கிற்குச் சென்றிருந்ததாகத் தெரிவித்தார். "இந்தியாவின் வெற்றிக்காக நான் விநாயகரைப் பிரார்த்திக்கிறேன்," என்று அவர் கூறியதாக 'ஏஎன்ஐ' செய்தி நிறுவனம் தெரிவித்தது.