மகாராஷ்டிரா: அணை உடைந்து ஒன்பது பேர் மரணம்; பலரைக் காணவில்லை

மகாராஷ்டிரா: அணை உடைந்து ஒன்பது பேர் மரணம்; பலரைக் காணவில்லை

2 mins read
59c01e21-2b5c-4c86-87d5-158cd18898ab
படம்: ராய்ட்டர்ஸ் -

தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஓர் அணை உடைந்ததால் நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒன்பது பேர் உயிரிழந்தனர்; குறைந்தது 15 பேரைக் காணவில்லை.

வடகிழக்குப் பருவமழை தீவிர மடைந்துள்ளதால் கடந்த ஐந்து நாட்களாக மகாராஷ்டிராவில் மழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் புனே, மும்பை உள்ளிட்ட இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தது உள்ளிட்ட மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை கிட்டத்தட்ட 45 பேர் வரை உயிரிழந்தனர்.

இந்நிலையில், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணையில் நேற்று முன்தினம் இரவு பத்து மணியளவில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. பெருமளவில் நீர் வெளியேற, 12 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. அத்துடன், கிட்டத்தட்ட 20 வாகனங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

அணையை ஒட்டி அமைந்து

உள்ள பல கிராமங்களுக்குள் நீர் புகுந்துவிட்டது. பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி குறைந்தது பத்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

அணைக்கு அருகேயுள்ள பாலம் முற்றிலுமாக நீரில் மூழ்கி இருப்பதால் தேசிய பேரிடர் நிவாரணப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ரத்னகிரி மாவட்ட ஆட்சியரையும் மற்ற உயரதிகாரிகளையும் தொடர்புகொண்டு நிலைமையைக் கேட்டறிந்தார். நீரில் அடித்துச் செல்லப்பட்டு, மாண்டோருக்காக இரங்கல் தெரிவித்த அவர், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும்

உத்தரவிட்டார்.

இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா நான்கு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மாநில நீர்

வளத் துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன் அறிவித்துள்ளார்.

பத்தொன்பது ஆண்டுகள் பழமையான அந்த அணையில்

விரிசல் ஏற்பட்டதாக மூன்று மாதங்களுக்கு முன்னரே புகார் அளிக்கப்பட்ட போதும் அதைச் சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட

வில்லை என அவ்வட்டாரவாசிகள் புகார் கூறினர்.

சிப்லுன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சதானந்த் சவானும் இதை உறுதிசெய்தார்.

"அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கிராமவாசிகள் புகார் கூறியதை அடுத்து, சில நாட்களுக்குமுன் நேரில் சென்று அணையை ஆய்வுசெய்தேன். அணையில் விரிசல் இருந்ததை நானும் கண்டேன். இது பற்றி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த பின்னரும் நடவடிக்கை எடுக்கப்

படவில்லை," என்றார் அவர்.

இதனிடையே, ஐந்து நாட்களுக்குப் பிறகு மழை தணிந்ததால் மும்பைவாசிகள் நேற்று மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். இருந்தபோதும், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மும்பை விமான நிலையத்தில் நேற்று 75 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பல விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.