புதுடெல்லி: பாஜகவினரின் அடவாடிப் போக்கையும் தவறுகளையும் சகித்துக்கொள்ள முடியாது என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய போது பிரதமர் மோடி திட்ட வட்டமாகத் தெரிவித்தார். தவறு செய்தவர்கள் எந்தத் தலைவருடைய மகனாக இருந்தா லும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
பாஜக எம்பிக்கள் கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, பாஜகவின் வளர்ச்சிக்காக அதன் தலைவர்கள் பலர் நீண்ட காலம் உழைத்ததாக தெரிவித்தார். எனினும் ஒருசிலரின் அடாவடிப் போக்கால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாகவும் அவர் கூறினார். அண்மையில் மத்திய பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ ஆகாஷ் வர்கியா அரசு ஊழியரை கிரிக்கெட் மட்டையால் தாக்கும் காணொளிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு உள்ளூர் பாஜகவினர் திரளாகக் கூடி வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஆகாஷ் வர்கியாவை மறைமுகமாகச் சாடியதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். ஆகாஷின் தந்தை விஜய் வர்கியா, தற்போது பாஜக பொதுச்செயலராக பொறுப்பில் உள்ளார்.
கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தவறான நடத்தையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள இயலாது என்றார். இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி, பிரதமர் மோடி தனது எண்ண ஓட்டத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியதாகக் கூறினார்.
"யாருடைய மகனாக இருந்தாலும் அராஜகமான, தவறான போக்கை ஏற்க இயலாது. தவறு செய்தவர்களை வரவேற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டுக்கு சேவையாற்றவே மக்கள் நம்மை தேர்ந்தெடுத்து உள்ளனர். ஆட்சி, அதிகாரத்தை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீது கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று மோடி திட்டவட்டமாகக் கூறியதாக ஊடகச் செய்தி கூறுகிறது. அவர் இவ்வாறு கூறிய போது, விஜய் வர்கியாவும் கூட்டம் நடை பெற்ற அரங்கில் இருந்தார். மோடி யின் இந்தப் பேச்சையடுத்து ஆகாஷ் வர்கியா மீது பாஜக மேலி டம் விரைவில் நடவடிக்கை எடுக் கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

