அதிகாரியை அவமானப்படுத்திய எம்எல்ஏ சிறையில் அடைப்பு

அதிகாரியை அவமானப்படுத்திய எம்எல்ஏ சிறையில் அடைப்பு

1 mins read
b9dcb01e-8355-438c-a77e-e7a0ba1392de
காங்கிரஸ் எம்எல்ஏ நிதிஷ் ரானே (வலக்கோடி) தமது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அதிகாரி மீது சேற்றை ஊற்றினர்.  படம்: இந்திய ஊடகம் -

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் கன்காவ்லி என்ற நகருக்கு அருகே ஆற்றுப்பாலம் ஒன்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஆய்வு செய்வதற்காக பிரகாஷ் ஷெடேகர் என்ற அரசு பொறியாளர் அண்மையில் அங்கு சென்றார்.

தகவல் அறிந்ததும் கன்காவ்லி சட்டமன்ற உறுப்பினர் நிதிஷ் ரானே தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்றார். நிதிஷ் ரானே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அத்துடன் மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயண் ரானேவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. நிதிஷ் ரானே 'ஸ்வாபிமான் சங்காட்டனா' என்ற அரசு சாரா அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும் நிதிஷ் ரானாவுடன் வந்திருந்தனர். கன்காவ்லி பகுதி சாலைகள் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், அவற்றைச் சரிசெய்ய தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டிய நிதிஷ் ரானே, பொறியாளர் பிரகாஷ் ஷெடேகர் மீது சேற்றை ஊற்றும்படி தனது ஆதரவாளர்களிடம் கூறினார்.

இதன்பின் அவரது ஆதரவாளர்கள் சில வாளி சேற்றை அவர் மீது ஊற்றினர். அத்துடன் அங்குள்ள பாலத்தில் அவரைக் கட்டிப் போட்டனர். அங்கு இருந்த சிலர் இந்த சம்பவத்தை கைபேசியில் பதிவு செய்தனர். அதிர்ச்சியளிக்கும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் தொடர்பில் நிதிஷ் ரானேவை கைது செய்த போலிசார் அவரை சிறையில் அடைத்தனர். நேற்று அவர் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.