மும்பை: மகாராஷ்டிராவில் ரத்ன கிரி அணை உடைந்ததற்கு நண்டுகளே காரணம் என சிவசேனா அமைச்சர் கூறி உள்ளது சர்ச்சையாகி உள்ளது. அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சை பல்வேறு கட்சியினரும் உள்ளூர் தலைவர்களும் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
அண்மையில் பெய்த தொடர் கனமழையின்போது மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் திவாரே அணை உடைந்தது. இதில் 18 பேர் உயிரிழந்ததோடு பத்துக்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், அணை உடைந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியைச் சேர்ந்த மகாராஷ்டிர நீர்வளத்துறை அமைச்சர் தனஜி சவந்த், "அணையில் எந்தக் கசிவும் இல்லை. இதற்குமுன் 15 ஆண்டுகளாக நீர் சேமித்து வைக்கப்படுகிறது.
"அணையில் அதிக அளவில் வசிக்கும் நண்டுகள்தான் அணையில் உடைப்பு ஏற்படக் காரணம். இந்த நண்டுகள் அணையின் சுவர்களை அரித்து உடைப்பை ஏற்படுத்தி விட்டன. அதனால் அண்மையில் கசிவு ஏற்பட்டுள்ளது. இது பற்றி அணையின் கரையில் வசிப்பவர்களுக்கு அதிகாரிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்
துள்ளனர்," என்றார்.
அமைச்சரின் இந்த பேச்சு குறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், "இவர்களைப் போன்ற ஊழல் நண்டுகளிடம் இருந்து தான் ஏழைகளைக் காப்பாற்ற வேண்டும்," என்றார்.

