இன்னுமா பிரிட்டிஷ் ஆட்சி? ரயிலில் அனுமதி மறுக்கப்பட்ட 82 வயது முதியவர் கொதிப்பு

இன்னுமா பிரிட்டிஷ் ஆட்சி? ரயிலில் அனுமதி மறுக்கப்பட்ட 82 வயது முதியவர் கொதிப்பு

2 mins read
948b236a-d5e4-439a-b45f-2a7a5d80dbc9
82 வயது முதியவர் ராம் ஆவாத் தாஸ் -

புதுடெல்லி: ரயிலில் இருந்து 82 வயது முதியவர் ஒருவர் இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.டெல்லியில் இருந்து கான்பூர் செல்லும் சதாப்தி விரைவு ரயிலில் எடவாவில் இருந்து கசியாபாத் செல்வதற்காக 82 வயது முதியவர் ராம் ஆவாத் தாஸ் (படம்) ஏறினார். அப்போது ரயில்வே போலிசார் அவரை ரயிலில் ஏறவிடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களிடம் ராம் ஆவாத் தாஸ், "நாட்டுல என்னய்யா நடக்குது? இன்னுமா பிரிட்டிஷ் சர்க்கார் நடக்குது? நான் முன்பதிவு செய்த டிக்கெட் வைத்திருக்கிறேன்," என்று ஆவேசமாக கேட்டிருக்கிறார். அதன்பின், ரயிலிலிருந்து இறங்கிய அவர் அடுத்த பெட்டிக்குச் சென்று ஏறுவதற்குள் ரயில் கிளம்பிச் சென்றுவிட்டது.

இதையடுத்து, ராம் ஆவாத் வடக்கு மத்திய ரயில்வே அதிகாரிகளிடம் புகார் கெடுத்துள்ளார். அதில், "நான் மகாத்மா காந்திபோல வேட்டியும் துண்டும் அணிந்திருந்ததால்தான் என்னை ரயில்வே போலிசார் ரயிலில் இருந்து இறக்கிவிட்டனர். இன்னும் பிரிட்டிஷ் சர்க்கார் நடப்பதுபோல் இருக்கிறது. அந்த போலிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.

இது பற்றி, வடக்கு மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி அஜித் குமார் சிங் கூறுகையில், "முதியவர் முன்பதிவு டிக்கெட் வைத்திருந்தார் என்பது உண்மை. அவர் தவறுதலாக பவர் காரில் ஏறினார். அதனால், போலிசார் அவரை வேறொரு கோச்சுக்கு செல்லுமாறு கூறினர். அவர்களுடன் முதியவர் வாக்குவாதம் செய்துவிட்டு வேறு கோச்சுக்கு செல்வதற்குள் ரயில் புறப்பட்டுவிட்டது. எடவாவில் இந்த ரயில் இரண்டு நிமிடங்கள்தான் நிற்கும். இந்த சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டியதில்லை," என்றார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.