மும்பை: மகாராஷ்டிராவில் மழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில் திவாரே என்ற அணை உடைந்து பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா நீர்வளத்துறை அமைச்சர் தனஜீ சவந்த், நண்டுகள் அரித்து பலவீனப்படுத்தியதன் காரணமாகவே அணையில் உடைப்பு ஏற்பட்டதாக சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி இளைஞரணி தலைவர் ஜிதேந்திர அவ்கட் தலைமையிலான தொண்டர்கள் கோலாப்பூரில் உள்ள காவல் நிலையத்துக்கு நண்டுகளுடன் வந்தனர். "ரத்னகிரி அணைக்கட்டு நண்டுகள் அரித்து உடைப்பு ஏற்பட்டதாக அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். ஆகையால் இந்த நண்டுகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவற்றை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்," என புகார் மனு அளித்தனர். செய்வதறியாது போலிசார் விழித்தனர்.

