திருமலை: ஆந்திராவில் பயனீட்டாளர்களின் வீடுகளுக்கே சென்று மணல் விற்க அரசு முடிவு செய்துள்ளது என்று அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திரா ரெட்டி தெரிவித்தார். ஆந்திராவின் தாடேபல்லியில் உள்ள முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வீட்டில் கனிமவளத்துறை அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திரா ரெட்டி மற்றும் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பின்னர் அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திரா ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், "ஆந்திராவில் கடந்த சந்திரபாபு நாயுடு ஆட்சியில் மணல் விற்பனை, கொள்ளையர்கள் கைகளில் சிக்கியதால் பல கோடி ஊழல் நடந்துள்ளது. மீண்டும் அதுபோன்ற நிலை ஆந்திராவுக்கு வரக்கூடாது. எனவே மணல் மாபியாக்களின் கைகளுக்குச் செல்லாமல், அரசும் பயனீட்டாளர்களும் லாபம் பெறும் வகையில் வெளிப்படைத் தன்மையுடன் புதிய திட்டத்தை அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 5ம் தேதி முதல் மணல் விற்பனை செய்யப்பட உள்ளது.
"புதிய திட்டத்தில் மாநிலம் முழுவதும் கனிம வளத்துறை சார்பில், பயனீட்டாளர்கள் வீடுகளுக்கு நேரடியாக மணல் கொண்டு சென்று வழங்கப்படும்.
"இதற்காக தனி கைத்தொலைபேசி செயலி மற்றும் இணையத்தளம் வாயிலாக தங்களுக்குத் தேவையான மணலை வாங்க முடியும். இந்த முறையில் பல கோடி ரூபாய் ஊழல் தடுக்கப்படும்," என்று அவர் கூறினார்.

