புதுடெல்லி: மத்திய வரவுசெலவுத் திட்டம் குறித்து காங்கிரசின் ரன்தீப் சுர்ஜிவாலா டுவிட்டரில் தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டார். அவற்றில் அவர், "நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 'புதிய இந்தியா'வை உருவாக்குவதற்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்வதாகக் கூறியிருக்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு அப்படி எதுவும் தெரியவில்லை. பொருளியலை மீட்டெடுப்பதில் பூஜ்யம்.
"கிராமப்புற வளர்ச்சியில் பூஜ்யம். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பூஜ்யம். நகர்ப்புறங்களுக்குப் புத்துணர்வு அளிப்பதில் பூஜ்யம் என் வரவுசெலவுத் திட்டம் பூஜ்யமாகவே உள்ளது.
"இதுதான் புதிய இந்தியாவை உருவாக்குவதா?" என்று விமர்சித்துள்ளார். வரவுசெலவுத் திட்டம், அம்பானிகளுக்கு ஆதரவாக உள்ளதா?
விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளதா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் நேற்றுக் கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்துக்கொண்டே ராகுல் பதில் அளிக்கையில், ''இது நல்ல கேள்வி. இதன் பொருள் உங்களுக்கே புரிந்திருக்கிறது என்பதுதான். இது பணக்காரர்களுக்கு உதவும். ஏழைகளுக்கு உதவாது'' என்று தெரிவித்தார்.

