கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத), காங்கிரஸ் கூட்டணி அரசு எந்த நேரத்திலும் கவிழும் அபாயத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 78 தொகுதிகளில் வென்ற காங்கிரசும் 37 இடங்களில் வென்ற மஜதவும் கூட்டணி அரசாங்கத்தை ஏற்படுத்தின. மஜத தலைவர் குமாரசாமி (படம்) தலைமையிலான அரசாங்கத்திற்கு இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவு வழங்கினர்.
ஆனால், முதல்வர் நாற்காலியில் அமர்ந்தது முதல் குமாரசாமிக்கு அரசியல் நெருக்கடி வந்த வண்ணம் இருந்தது. அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் காங்கிரசைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பலர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தனர்.
இந்நிலைமை முற்றி இப்போது 14 எம்எல்ஏக்கள் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும் ஏழு முறை எம்எல்ஏவாக இருந்தவருமான ராமலிங்கா ரெட்டி இந்த அதிருப்தி குழுவுக்குத் தலைமை ஏற்றுள்ளார். இவர் உள்பட 12 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் மஜதவின் இரு எம்எல்ஏக்களும் தங்களது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் அளிக்கச் சென்றனர். அலுவலகத்தில் அவர் இல்லாததால் சபாநாயகரின் செயலாளரிடம் கடிதத்தைக் கொடுத்த பின்னர் ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்து தாங்கள் பதவி விலகிவிட்டதாகக் கூறினர்.
அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தலைவர்கள் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவகுமாரும் துணை முதல்வர் பரமேஸ்வரராவும் 'விலகிச் செல்லாதீர்கள்' என்று அதிருப்தி எம்எல்ஏக்களிடம் கெஞ்சினர்.
ஆனால் அந்த முயற்சிக்குப் பலனில்லை. சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் ராமலிங்கா ரெட்டி உள்ளிட்ட 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தனியாருக்குச் சொந்தமான விமானத்தில் மும்பைக்கு விரைந்தனர். அங்கு பாந்த்ரா என்னும் இடத்தில் உள்ள ஓர் ஆடம்பர ஹோட்டலில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களைப் பத்திரமாக அனுப்பி வைத்தது பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவின் தனிச் செயலாளர் சந்தோஷ் தலைமையிலான பாஜக குழுவினர் என்று கூறப்பட்டது.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த முதல்வர் குமாரசாமியும் லண்டன் பயணத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவும் அவசரமாக பெங்களூரு திரும்புகின்றனர். நிலைமை கைவிட்டுப்போனதால் வேறு வழியின்றி குமாரசாமி தமது பதவியை இன்று கைவிடுவார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு பாஜக ஆட்சி அமையுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "பொறுத்திருந்து பாருங்கள்," என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

